சைக்கிள் ஓட்டுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்
*மிதிவண்டிப் பயிற்சி*
உடல் நலத்தைப் பேணுவதற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லா மூட்டுகளின் இயக்கத்தையும் முழுமையாக வைத்துக் கொள்வதற்கும், நோய், நொடிகள் அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கும் உடற்பயிற்சி தேவை.
தொற்றா நோய்கள் எனப்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவை பெருகி வருவதற்கு வாழ்க்கை முறையில் உள்ள கோளாறுகளே அடிப்படைக் காரணம். Lifestyle diseases என்றழைக்கப்படும் இந்நோய்களை சரியான உணவு முறையாலும், உடற்பயிற்சியினாலும் முற்றிலுமாகத் தவிர்க்க முடியும்.
'உடற்பயிற்சிகளினால் ஆபத்துக்கள் உண்டா?' என்று கேட்டால் அதற்கான பதில் 'ஆம்' என்பதாகும்.
உடற்பயிற்சிகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். Isometric Exercises தசைகளை இறுகச் செய்யும் உடற்பயிற்சிகள் இந்த வகையினைச் சேரும். உடற்பயிற்சி கூடத்தில் எடைகளைத் தூக்கிச் செய்யும் உடற்பயிற்சிகள் இவை. இவற்றை செய்யும் போது தசைகள் இறுகும். தசைகளுக்கு உள்ளே ரத்த அழுத்தம் மிகும். இவ்வகையான உடற்பயிற்சிகளையும் இளைஞர்கள் செய்யலாம். அதுவும்கூட கவனத்தோடு தான் செய்ய வேண்டும். இவ்வகையான உடற்பயிற்சிகளைச் செய்யும் போது இதயத்திற்கான வேலை மிக அதிகமாகிறது. கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் இப்படிப்பட்ட உடற்பயிற்சி செய்துவிட்டு வரும்போது இறந்துபோனதை அறிவீர்கள்.
இன்னொரு வகை Isotonic Exercises. இந்த வகை உடற் பயிற்சியில் தசைகள் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும். தசைகள் தொடர்ச்சியான இறுக்கத்தில் இருக்காது. நடப்பது, ஓடுவது, நீச்சலடிப்பது, மிதிவண்டிப் பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் இது போன்றவை. இந்த வகையான உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவை. இதயத்திற்கு வலு சேர்க்கக் கூடியவை.
நடப்பதும், நீச்சலடிப்பதும் கை, கால்கள் இரண்டுக்கும் வேலை தரக்கூடியவை. மிதிவண்டிப் பயிற்சியில் கால்களுக்கு மட்டும் தான் வேலை. கைகளுக்கு பணி கிடையாது.
வாரத்தில் இரண்டு நாள்கள் மிதிவண்டிப் பயிற்சியும், இரண்டு நாள்கள் நீச்சல் பயிற்சியும் செய்தால் மிக மிக நல்லது!
நான் பதினைந்து ஆண்டுகளாக மிதிவண்டிப் பயிற்சி செய்து வருகிறேன். குறைந்தது 10 கிலோ மீட்டர் தூரமும், அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் தூரமும் செல்கிறேன்.
சூரிய ஒளி உடல் நலத்துக்கு இன்றியமையாதது. கையில்லாத பனியனோடு சைக்கிள் ஓட்டும் போது, காலை, மாலை வேளைகளில் வீசும் மஞ்சள் வெயில் படுவது நல்லது.
மழைச் சாரல் வீசும் மாலைகளிலும், பனி மூடியிருக்கும் காலைகளிலும் சைக்கிள் ஓட்டுவது விவரிக்க முடியாத பேரின்பங்கள். ஒவ்வொரு பருவத்துக்கும் மாறும் இயற்கைக் காட்சிகள் மனதை மயக்கும்.
தருமபுரி மாவட்டத்தின் எழிலை விழிகளால் பருக மிதி வண்டியில் பயணம் செய்து பாருங்கள்!
*மருத்துவர். இரா. செந்தில்*
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்